Pages

Wednesday, 13 July 2011

சிந்துவெளி நாகரிகம்

சிந்துவெளி நாகரிகம்
மனிதன் முதன் முதலாகப் பரிணாம அடிப்படையில் (Evolution) குமரிக்கண்டத்திலேயே தோன்றியதாக அறிஞர் கருதுகின்றனர். குமரிக்கண்ட மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்த நிலையில் வடஇந்தியப் பகுதிகளில் சென்று குடியேறினான். அங்குச் சிந்துநதிக்கரையின் சமவெளிப்பகுதியில் அவன் அழகிய குடியிருப்புகளையும், நகரங்களையும் உருவாக்கினான். அந்த நகரங்களே இன்று மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பெற்றுள்ள மொகஞ்சதரோ, ஹரப்பா என்னும் நகரங்களாகும். இங்குத் தோன்றிய நாகரிகமே சிந்துவெளி நாகரிகம் எனப்படும். இதனைத் தோற்றுவித்தவர் தென்னாட்டிலிருந்து சென்று பரவிய திராவிடரே ஆவர்.





  • ஹரப்பா









  • 1920ஆம் ஆண்டு ஹரப்பா என்ற பழைய நகரம் மண்ணுக்கடியில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை ஒன்றும், மட்பாண்டங்களும், விலங்குகளின் எலும்புகளும், சில முத்திரைகளும் இங்குக் கிடைத்தன.
    ஹரப்பா பஞ்சாப் பகுதியில் ராவி, சட்லெஜ் ஆறுகளுக்கு இடையில் லாகூர் - முல்ட்டான் தொடர்வண்டி வழியில் உள்ளது. எம். எஸ். வாட் (M.S. Watt) என்னும் அறிஞர் ஹரப்பாவின் அகழ்வாய்வுகள் என்னும் நூலில் ஹரப்பா பற்றிக் கூறும் செய்திகள் வியப்பளிக்கின்றன. இந்த நகரத்தின் சுற்றளவு 4 கிலோ மீட்டராகும். இங்கு ஆறு பெரிய மண்மேடுகள் உள்ளன. இவற்றில் பெரியது 29,000 செ. மீ. நீளமும், 23,000 செ. மீ. அகலமும், 1,800 செ. மீ. உயரமும் உடையது. இந்த மண்மேடுகள் எட்டு அடுக்குகளைக் காட்டுகின்றன. எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட நகரம் என்பதை இந்த அடுக்குகள் காட்டுகின்றன. கி. மு. 3,500க்கும் கி.மு. 2,750க்கும் இடைப்பட்ட காலத்தின் நாகரிகம் என்று இதனைக் கருதலாம்.




  • மொகஞ்சதாரோ









  • மொகஞ்சதாரோ நகரம் நிலத்தின் அடியில் புதையுண்டிருப்பது 1922-ல் கண்டறியப்பட்டது. சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்நகரை அகழ்ந்தபோது நாற்கோணமுள்ள ஒரு முற்றம், முற்றத்தைச் சூழ முப்பது சிற்றறைகள், சில நாணயங்கள் ஆகியன காணப்பெற்றன. அங்கே சில எழுத்து முத்திரைகளும் கிடைத்தன. மொகஞ்சதாரோ ஏழு அடுக்குகளையுடைய நிலப்பகுதியைக் காட்டிற்று. வரிசை வரிசையான வீடுகள், நீண்ட தெருக்கள், பெருமாளிகைகள், நீராடும் குளம், மண்டபங்கள், கழிவுநீர்ப் பாதைகள், மட்பாண்டங்கள், பல நிறந் தீட்டப்பெற்ற பானைகள், பொம்மைகள், அணிவகைகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம் கி.மு. 3,250 முதல் கி.மு. 2,750ஆக இருக்க வேண்டும் என்பர்.
    மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த நாகரிகத்தைக் காட்டுகின்றது. காற்றோட்டமும் வெளிச்சமும் தடையின்றி அமையும் வகையில் பெருந்தெருக்களும் குறுந்தெருக்களும் அமைக்கப்பட்டிருந்தன. கழிவுநீர்க் கால்வாய் அப்பெருநகரில் அமைந்த முறைபற்றிக் கூறப்படுவது கவனிக்கத்தக்கது.
    "மொகஞ்சதரோவில் கால்வாய் இல்லாத நெடுந்தெருவோ குறுந்தெருவோ இல்லை. கால்வாய்கள் அனைத்தும் ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து வழவழப்பாக்கிய செங்கற்களால் அமைந்தவை. பொதுவாக எல்லாக் கால்வாய்களும் 50 செ. மீ. ஆழமும் 22 செ. மீ. அகலமும் உடையனவாக இருக்கின்றன. இக்கால்வாய்களைப் போலவே இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கழிவுநீர்க் கால்வாய்களும் இத்தகைய சிறந்த முறையில் செய்யப்பட்ட செங்கற்களைக் கொண்டே கட்டப்பெற்றவை ஆகும். இவ்வீட்டு வடிகால்கள் தெருக் கால்வாயுடன் சேரும் இடங்களில், சதுர வடிவில் செங்கற்கள் கொண்டு கட்டப்பெற்ற சிறு குழிகள் அமைந்துள்ளன. அக்குழிகள் 22 செ. மீ. சதுரமும் 45 செ. மீ. ஆழமும் உடையவை. அக்குழிகளில் 90 செ. மீ. உயரமுடைய தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அத்தாழிகளின் அடியில் சிறிய துளைகள் இருக்கின்றன. வீட்டு வடிகால்கள் வழியே கழிவுநீருடன் குப்பை கூளங்கள் வந்த தாழிகளில் விழுதல் இயல்பு. தாழிகளின் அடியில் உள்ள சிறிய துளைகள் வழியே கழிவுநீர் தொட்டியில் நிரம்பித் தெருக்கால்வாயில் கலக்கும். அந்நீருடன் வந்த குப்பை கூளங்கள் தாழியின் அடியிலேயே தங்கிவிடும். நகராண்மைக் கழகப் பணியாட்கள் அக்குப்பை கூளங்களை அவ்வப்போது தாழிகளிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்வர். "ஆ! இச்சிறந்த முறை வேறு எந்தப் பண்டை நகரத்திலும் இருந்ததாக யாம் கண்டதில்லை; கேட்டதுமில்லை" என்று சர் ஜான் மார்ஷல் போன்றோர் கூறிப் பெருவியப்பு எய்தியுள்ளனர்"
    என்று கூறுவதிலிருந்து மிகப்பெரிய ஒரு நாகரிகம் மண்ணுக்கடியில் புதைந்து போனதை அறியலாம்.
     




  • புதையுண்ட நாகரிகத்தின் பெருமை









  • சிந்து வெளியில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் வணிகர்கள். மேற்காசிய நாடுகளோடும், காஷ்மீர், மைசூர், நீலகிரி, ராஜபுதனம் போன்ற உள்நாட்டுப் பகுதிகளோடும் அவர்களுக்கு வாணிகத் தொடர்பிருந்தது. தங்கம், செம்பு, தகரம், வெள்ளி, விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை அவர்கள் இறக்குமதி செய்தனர். வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட எடைக் கற்கள் தசாம்ச முறையில் அமைந்துள்ளன. முகத்தல், நீட்டல் அளவைகளும் அம்முறையிலேயே அமைந்துள்ளன.
    இந்த முத்திரைகளில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் சிவபெருமான் உருவம் குறிக்கத்தக்கது. திராவிட நாகரிகத்தின் சமயப் பண்பாடு இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆற்றைத் தலையிலிருந்து கீழே விடும் சிவனின் வடிவம் கவனிக்கத்தக்கது. நீண்ட காலம் இத்தெய்வம் பற்றிய கருத்து திராவிடர்களிடையே இருந்திருக்கின்றது. சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் யோகநிலையில் அமர்ந்த கடவுள் உருவம் பற்றிய வருணனை உள்ளது. இக்காலத்தில் அவ்வடிவைத் தட்சிணாமூர்த்தி எனக் கூறுகின்றனர். கையில் தண்டமும் நீர் கொண்ட கரகமும் இத்தெய்வம் கொண்டிருந்ததாகக் கலித்தொகை குறிக்கின்றது. திராவிடப் பண்பாட்டின் அடிப்படையான சமயச் சிந்தனையை இவ்வுருவம் உணர்த்துகின்றது. இன்றும் சிவன் கோயில்களின் முதல் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமர்ந்த வடிவில் இருக்கும் இவ்வுருவம் காணத்தக்கது.

    No comments:

    Post a Comment