

- தொலமியின் இலங்கை
இனி இந்த “சோனகர்” ரின் வரலாற்றைப் பார்ப்போம். மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இந்தியா நோக்கிய தம் பார்வையை செலுத்தமுன்பே அரேபியர் தெற்கு, தென்கிழக்காசிய பிராந்தியத்தில் தமது குடியிருப்புக்களை நிறுவியுள்ளனர். இந்த வகையில் கி.மு. 310 ஆண்டளவில் மடகஸ்கார் தீவுக்கும் சுமாத்திரா தீவுக்கும் இடையிலான வியாபாரபாதையின் கடல் வழி இணைப்பு இலங்கையூடாகவே இடம் பெற்றுள்ளது. எகிப்திய பல்கலை வல்லுனர் க்ளோடியுஸ் தொலமி(Cl
audius Ptolemy) கி.பி. 150களில் இலங்கை பற்றிய வழங்கிய தகவல்கள் அவர் அறேபியரிடம் இருந்து பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தொலமி வரைந்த இலங்கை படத்தில் நதிகள் புலூவியஸ்(Fluvius) என்று கூறப்படுகிறன. அதன் அடிப்படையில் மன்னாரின் தென் புறத்தில் ஓடும் நதி “பாசிஸ் புலூவியஸ்” அதாவது பாரசிகர் நதி, அதாவது அப்பிரதேசத்தில் பாரசிகர் அதிகம் வாழ்ந்ததால் அப்பெயர் வழங்கப் பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. இந்த நதி இன்று அருவி ஆறாக பெயர் பெற்றுள்ளது, (மகாவழி கங்கை ஓரத்திலும் பாரசீகர் வாழ்ந்ததாக காணக்கிடைகின்றது). இந்த நதிக்குக் கீழ் இன்றைய புத்தளம் நகருக்கு வடக்காக “சோனா புலூவியஸ்” (Soana Fluvious) என்ற நதியை அவர் வரைந்துள்ளார். சோனகர் நதி என்பதை அது குறிக்கிறது. அதாவது சோனகர் அதிகம் வாழ்ந்த இடமாக அது அடையாளப் படுத்தப்படுகிறது. இந்த நதியினை இன்றும் புத்தள பிரதேச மக்கள் “பொன்பரப்பி ஆறு”, அல்லது “காலாவி ஆறு” என்றழைகின்றனர். இது சிங்களதில் “கலா ஒய” என்றழைக்கப் படுகின்றது. இந்த நதி தீரங்களுக்கே இன்றும் புத்தளம் வாழ் மக்கள் குடும்பம் குடும்பமாக சென்று குடிசை(tent)அடித்து, இரவு வேளைகளில் வேட்டையாடி தமது கோடைகாலத்தை கழிக்கும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர். இது ஆற்றங்கரையில் வாழ்ந்தோரின் பழக்க வழக்கங்களின் மிச்சசொச்சங்கள்.இதே நேரம் கி.மு. 327-326 இடைப்பட்ட காலத்தில் மகா அலெக்ஸ்சந்தரின் கட்டளை பிரகாரம் இலங்கையின் புவி வரை படத்தைத் தந்த கிரேக்க மாலுமி ஓனொஸ் கிறிட்டோஸ்( Oneus Crites ) புத்தளத்திளும் அதைச் சுற்றியுள்ள அயல் பாகங்களுடன் நிலத்தொடர்புடைய பகுதிகளிலும் “சோனகர்”களின் குடியேற்றம், விஜயன் இலங்கைக்கு வர முன்னரே அதிகம் காணப்பட்டதாக குறிப்பிடுகின்றார். அதே நேரம் இந்த பொன்பரப்பி ஆற்றை “சோனாள் பொட்டமஸ்” என்று குறிப்பிட்டுள்ளார். “சோனாள்” என்பது “சோனகரையும்”, “பொட்டமஸ்” என்பது ஆற்றையும் குறிக்கும். இந்த பிரதேசம் தான் அதாவது அருவி ஆற்றுக்கும், மாயன் ஆறு என்றழைக்கப்படும் தெதுறு ஒயாவுக்கும், அதாவது இன்றைய சிலாபத்துக்கு வடக்கே பாயும் தெதூறு ஓயாவில் இருந்து மன்னாருக்கு தெற்காகவுள்ள குதிரைமலைக்கும் இடைப் பட்ட பிரதேசமே “சோனகம்” என்ற பிரதேசமாகவும் இந்த மாலுமி சித்தரிக்கின்றார். இந்த பகுதியை, அதாவது அரிப்பு, பொன்பரப்பு, புத்தளம் பிரதேசத்தை “Igona Civitas” ,அதாவது அறேபிய பழங்குடிகள் வாழ்ந்த இடமாகும் என J.R. Sinnathamby என்ற ஒரு ஆய்வாளரும் குறிப்பிடுகின்றார்.
இன்றைய 21ம் நூற்றாண்டில் நாம் காணும் நாடுகள், கண்டங்களின் அமைவுகள், சமுத்திரங்கள், மலைகள் எல்லாம் உலகம் தோன்றிய நாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். இதற்கு “கண்ட நகர்வு”(continental drift) களே காரணமாகும் என்பது நிலவியலாளர் கூற்று. இந்த அடிப்படையில் இன்றைய இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா முனை இதற்கிடையில் உள்ள தீவுகள் எல்லாம் ஓன்றாக இருந்த பகுதியை “கொண்ட்வானா லேண்ட்”(Gondwana Land) என்றழைப்பர். இந்து மாசமுத்திரத்தில் மூழ்கிப் போன பெரும் பகுதி “லெமுரியா கண்டம்” (Lemuria Continent) என அழைக்கப் பட்டதும் நாம் அறி ந்ததே. இந்த கடற்கோளின் விளைவே தென்பகுதி காணாமல் போக வடபகுதி இமய மலையாக நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். பின்னர் ஏற்பட்ட சிறிய கடற்கோள்களின் விளைவாக இந்திய நிலப்பரபில் இருந்து இலங்கை பிரிந்து சென்றது என்பதற்கு சான்றுகள் அதிகம் உள்ளன. அதே நேரத்தில் க்ளோடியுஸ் தொலமி(Claudius Ptolomy)யின் பிரகாரம் “தப்ரபேன்” (Taprobane) என்று அழைக்கப்பட இலங்கை இன்றை இலங்கையை விட பல மடங்கு விசாலமானது என்கின்றார். அதன் படி “க்கிறினிச்” (Greenwich) 75வது பாகை இன்றைய இலங்கையின் மேற்கு கரையில் இருந்து சுமார் 400 மைல் தூரத்தில் பண்டைய இலங்கையை ஊடறுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஆகவே அன்றைய இலங்கை இன்றைய இலங்கையைவிட விசாலமானது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இத்தகைய புதிய நில அமைவுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் நிலத்தால் இணைந்திருந்த பகுதி என்பதிலும் யாருக்கும் சந்தேகங்கள் எழ நியாமமிருக்காது.
இந்த இணைபின் மூலம் புத்தளம் பிரதேசத்தில் வட மேற்கில் பாய்ந்தோடும் “சோனகர் நதி” யினதும் அதற்கு எதிராக, அதாவது இந்தியாவின் தென் கிழக்கில் காயல்பட்டிணத்தின் கடலில் சங்கமிக்கும் “தாமிரவருணி ஆறு” (அல்லது பொதிகை நதி(?)) என்றழைக்கப்படும் ஆறும் ஓரே நதியே. இந்த நதியையும் “தப்ரபேன்” என்றே அழைத்துள்ளனர். அந்த காலத்தில் ‘சோனகர்” வாழ்ந்த இடமும் அதுவே. சோனகர் பிரதேசத்தைப் பிரிப்பது “தாமிர வருணீ” என்ற நதியே என்றும் கூறப்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றுப் படுக்கைகளில் வாழ்ந்த மக்களின் பழக்க வழக்கங்க்கள், குணாதிசங்கள், உடல் அமைப்பு, நிறம், அவர்கள் பேசும் மொழியின் தன்மை(dialact), அவர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்கள், தாழி அடக்க முறை என்பதெல்லாம் ஓன்றையே சுற்றி நிற்கின்றது. அதுதான் சோனகர் என்ற இனத்தையும், அது காலங்காலமாக வாழ்ந்த இன்றும் வாழ்ந்து வரும் பிரதேசத்தையுமாகும்.
மேலும், இந்தியாவின் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் தெற்கு சுவற்றில் உள்ள கல்வெட்டில் இந்த” சோனகம்” பற்றிய தகவல் பெறமுடியும். தமிழ் நாட்டு பேரசர்கள் வெற்றி கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக “சோனகம்” குறிப்பிடப் பட்டுள்ளதானது அந்த பிரதேசத்தின் இருப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துவதா உள்ளது. இதே போலவே போர்த்துகேயர்களின் இலங்கை வருகைக்குமுன் மொரோக்கோ நாட்டின் யாத்ரீகர் இபுனு பதுதா(Ibn Batuta) 1345 ஆண்டு 9ம் மாதம் 12ம் திகதி “பத்தள” என்று அழைக்கப்பட்ட புத்தளத்தின் துறைமுகத்தில் தன் தோழர்களுடன் வந்திறங்கியதாக தனது “The travels of Ibn Batuta” என்ற நூலில் அதன் ஆசிரியர் சாமுவேல் லீ குறிப்பிடுகின்றார். இப்னு பதுதா, பாவாதமலையை தரிசிக்க புத்தளத்தில் வந்திறங்கியபோது அங்கு ஒரு பாரசிக மொழி பேசக்கூடிய பாண்டிய மன்னன் ஆட்சி செய்ததாகவும் குறிப்பிடுகின்றார். இந்த பாண்டிய மன்னனாக வருணிக்கப்பட்டவனே “தக்கியூதீன்” என்று இனங்காணப்பட்டான். தக்கீயுதீன் அடிப்படையில் ஒரு பாரசிகன் என்றும் பாண்டிய மன்னனின் படையில் தளபதியாக இருந்தவன் என்பதும் அவன் பாண்டிய மன்னனின் மகள் ஒருவரை திருமணம் முடித்திருந்தான் என்பதும் வரலாறு. ஆகவே இலங்கையின் புராதன துறைமுகங்களில் ஒன்றான புத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதை தன் நிருவாகதில் வைத்திருக்க தக்கியுதீன் நியமிக்கப்பட்டிருப்பத்ற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த ”சோனகர்” என்ற இனம் ஒரு கலப்பு இனம். இந்த இனத்தின் தோற்றத்துக்கு பல மூலங்கள் உள்ளன. இருப்பினும் அனைத்து மாறுபட்ட மூலத்திலும் ஒரு அசைக்க முடியாத, மாறாத மூலமாக காணப்படுவது அதன் “அரபு” இரத்த கலப்பு. இந்த அரபுக்கள் முதலில் தென் அறேபியாவில் இருந்து, அதாவது இன்றைய யெமனில் (Yemen)இருந்து ஏடன் (Aden) துறைமுகம் ஊடாக வந்தவர்கள் (என் தாயின் தந்தையின் பேரன் ஒரு யெமனி). அவர்களைத் தொடர்ந்து, ஏற்கனவே கிழக்கு ஐரோப்பிய அரபு கலப்பால் உருவாகிய “மூர்”(Moors)கள், பிற்பாடு பாரசீகர், அவர்களுடன் அபிசினியர்கள் (எத்தியோப்பிய நாட்டவர்), பிற்பாடு தமிழ் நாட்டு சோனவர்கள், இன்றைய கேரளா அதாவது மலையாளிகள் பிற்பாடு வட அறேபியா, அதாவது பாலைவனத்து அரபிகள் என்று இலங்கை சோனகர் இனத்தின் மூலங்கள் பிரிந்து செல்கின்றன. இந்த மூலத்தின் தன்மைக் கேற்பவே இலங்கை ”சோனகர்” பலவித உடல், நிற அமைப்புகளைக் கொண்டுள்ளனர்.
சபாயீன், அதாவது தென் அறேபியர்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் தம் அரசியல், சமய செல்வாக்கை வட அறேபியர்கள், அதாவது பாலைவனத்து அறேபியரிடம் இழக்கும் வரை கடல் மூலமான இந்து சமுத்திர வாணிப சாம்ராஜ்யம் அவர்கள் கையிலேயே இருந்தது. இந்த அறபுக்கள் தான் தென் இந்திய கரைகளிலும் வடமேற்கு இலங்கை கரைகளிலும் சங்கு, முத்து குளிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் வருகை இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார நோக்கமாகவே இருந்தது. பிற்காலத்தில் சமய பரப்பலும் அதில் காணப்பட்டது. ஆனால் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் அறேபியரின் வருகை, வட இந்தியாவுக்கான அவர்களின் அரசியல் அடிப்படையிலான( நாடு பிடித்தல்) வருகையை விட வித்தியாசமானது. அதுவும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே இஸ்லாம் என்ற மதம் இந்த வட அறேபிய முஸ்லீம்களால் இலங்கை சோனகர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகின்றது. எனவே இஸ்லாமியர் அல்லது முஸ்லீம் என்ற சமய அடியாளம், சோனகர் என்ற இன அடையாளத்துக்கு மிகவும் பிற்பட்டது. அதாவது சோனகர் என்ற அடையாளம் கி.மு.4ம் நூற்றாண்டுக்கும் முற்பட்டது. சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டன் (Sri Alexander Johnston), இலங்கையின் முதல் பிரதம நீதியரசர், இவரும் இலங்கை சோனகர்கள் அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றார். முஸ்லீம் என்ற சமய அடையாளத்துடன் இலங்கைக்குள் பிரவேசித்த வட அறேபியர்கள் அனேகமாக அரசியல் அகதிகளாக பிரவேசித்தவர்கள். இவர்கள் அறேபியாவில் இருந்து வெளியேறி, இன்றைய ஈராகின் யூப்ரிடீஸ், டைக்கிறிஸ் நதியூடாக இந்தியாவின் தென் பகுதியிலும், இலங்கைத் தீவிலும், மலாக்காவிலும் குடியேறினர். இந்த அடிப்படையில் இலங்கையில் ஏற்கனவே அறேபிய தொடர்புடைய மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இவர்கள் குடியேறினர். இதில் பிரதான இடங்களாகக் கருதப்படுவது, புத்தளம், கல்பிட்டி, குதிரை மலை, மாந்தோட்டம், மன்னார், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மாத்தறை, வெளிகம, காலி, பேருவளை, கொழும்பு, கம்பொலை, ரத்தினபுர என்பனவாகும். மிக பின்னய காலத்தில் போர்த்துக்கேயரின் அச்சுறுத்தளினாலும் துறைமுகப்பட்டணங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டதினாலும் இங்கு வாழ்ந்துவந்த சோனகர்கள் உற்புர கிராமங்களுக்கும், மலை நாட்டு பிரதேசங்களுக்கும் குடியேறினர்.
இரண்டாம் புவனேகபாகுவின் வாரிசு கலேபண்டார (வத்ஹிமி)” ஹஸ்த்தி சைலாபுரம்” என்ற பெயர் கொண்ட ”சோனக” அரசன் இன்றைய குருணாகல் பகுதியை ஆட்சி செய்துள்ளான். அரசனாக இருக்க அடிப்படை தகுதி “பெளத்தன்” ஆக இருத்தல் என்ற அன்றைய, அப்பிரதே மேல்மட்ட அரசியல் வாதிகளின் போக்கினால், இந்த அரசன் எத்துக்கல் மலை உச்சியில் இருந்து வீழ்த்தப்பட்டு கொலை செய்யப்படும் வரை அரசாட்சியிலேயே இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கும் மன்னனின் எதிர்பாளர்களுக்கும் இக் கொலை தொடர்பாக ஆங்காங்கே கலவரம் நடந்தாக அறியப்படுகின்றது. ஆகவே இந்த விடயமும் இலங்கை சோனகரின் நீண்ட வரலாற்றை கூறுகிறது.
பிற்காலத்தில் இலங்கை கோட்டை, யாழ்ப்பாணம், கண்டி என்ற மூன்று இராச்சியங்களாக பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்ட போதும், இவற்றுக்குப் புறம்பாக ”வன்னிமை” அரசுகளும் இருந்தன. இவை இந்த இராஜதானிகளுக்கு புறம்பாக நிருவாக அதிகாரம் வழங்கப்பட்ட பிரதேசங்களாகும். இதில் முக்கியமானவை கிழக்கில் மட்டக்களப்பு, கொட்டியாரமும், வடமேற்கில் புத்தள பிரதேசமுமாகும். ஆனால் இந்த புத்தள பிரதேசம் ஒருகாலத்தில் கண்டி இராச்சியத்தின் கீழும், இன்னொரு காலத்தில் கோட்டை எல்லைக்கும் உற்பட்டிருந்திருந்தாக அறியக்கிடைக்கின்றது. ஒரு போதும் யாழ் இராஜ்சியதுக்கு கட்டுப்பட்டிருக்கவில்லை. புத்தளத்தில் ஆட்சியை தம் கையில் வைத்திருந்தவன் “தக்கியு தீன்” என்ற பாரசீக தொடர்பும், பாண்டிய மன்னனின் ஆதரவும் கொண்டவனாக சொல்லப்படுகிறது. கண்டி இராஜ்சியத்தின் வெளிநாட்டு வியாபாரம் புத்தளம், கல்பிட்டி துறைமுகம் ஊடாகவே நடைபெற்றுள்ளது. புத்தள நகரின் மேற்கே உள்ள “பெரு வழி ஆறு”, மீ ஒயா என சிங்களத்தில் அழைக்கப்படும், ஆறு புத்தளத்தில் இருந்து, மாத்தளை, அக்குரணை வரையும் செல்கிறது. இந்த ஆற்றோர பாதையை “கண்டிப் பெருவழி” என்றும் அழைப்பர். இந்த ஆற்றங்கரை பாதையில் புத்தளம் முதல் கண்டிவரையும் ஆங்காங்கே இருக்கும் முஸ்லிம்களை அதிகம் கொண்ட சோனக கிராமங்கள், சிறிய நகரங்கள் இன்றும் இருப்பதைக் காணலாம். “பெரு வழி ஆறு” தவளம் எனப்படும் பெருள்காவும் முறை அதாவது கூட்டம், கூட்டமாக மாடுகளின் மேல் பாரமான பொருள்கள் ஏற்றிச் செல்லும் முறைக்கு பெயர் பெற்ற பிரதேசமாகும். கண்டிப்பிரதேசத்தில் இருந்து கண்டிராஜ்ய வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் புத்தளம், கல்பிட்டி துறைமுகங்கள் வரை கொண்டுவரப்பட்ட முறையும் இதுவாகும். அதேபோல் புத்தள துறைமுகத்திலும், குதிரை மலை துறைமுகத்திலும் இருந்து பொருட்கள் இந்த தவள முறையிலேயே மலைநாடு நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆரம்பகால சோனகர் பற்றிய தவல்கள் ஒன்று பின்வரும் செய்தியையும் தருகின்றது. அதாவது கி.பி 437-407 பராக்கிரமபாகு காலத்தில், அநுராதபுரத்தில் “யொனாஸ்’ என்று குறிப்பிட்டு ஒரு பகுதி “சோனவர்”களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாம். இன்றும் சிங்களவர் இலங்கை சோனகரை “யொன்னு” என்றும் அழைக்கின்றனர். இந்த “யொன்னு” என்ற சொல் பாளி மொழியின் “யொன்ன” என்பதன் திரிபாகக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் “யோனக்க” என்ற சிங்கள சொல்லாலேயே பொதுவாக இன்று ”சோனகர்” அழைக்கப்படுகின்றனர். “மரக்கல” எனும் காரணப் பெயர், அதாவது மரக் கப்பல்களில் இலங்கை வந்த “அரபிகள்” என்று பொருள்படவும் இவர்கள் அழைக்கப்பட்டாலும், இலங்கையின் “மலாய்”, “போரா”, மேமன் முஸ்லிம்கள் தவிர, ஏனைய முஸ்லிம்களின் இனப் பெயராக அவர்களின் பிறப்புசாட்சி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் “சோனகர்” (தமிழ்) ” யோனக்க” (சிங்களம்) என்பதே. ஆனாலும் இவர்களை இஸ்லாம் என்ற சமையத்துடன் அடையாளப்படுத்தியே, அதாவது 95% மேல்பட்ட சோனகர்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அவர்களை குறிக்கும் முகமாகவே இன்றைய இலங்கை கொடியில் “பச்சை” நிறம் தரப்பட்டுள்ளது. இலங்கைக் கொடியின் சிங்க அடையாலமே அரபியர்களின் அன்பளிப்பென்பது வேறுமொரு கதை.
இதைவிடவும் இன்னுமொரு வரலாறு இந்த “சோனவர்”ருக்கு உண்டாம். அதாவது இது மனித வரலாற்றின் ஆரம்பத்துக்கே செல்கின்றது. நாம் ஏற்கனவே பார்த்த இலங்கையும், இந்தியாவும் இன்னும் பல பிரதேசங்களும் ஓன்றிணைந்த காலப்பகுதி அது. அப்போது முதல் மனிதன் “ஆதம்” என்பவர் படைக்கப்படுகின்றார். அவர் இலங்கையின் பாவாதமலை (Adam’s Peak) அல்லது “சமனல கந்த” என்று சிங்களத்தில் சொல்லும் மலை உச்சியில் சுவனத்தில் (Paradise) இருந்து இறக்கப்படுகிறார். அவரின் காலடி அடையாளம் அந்த மலை உச்சியில் இன்றும் யாத்திரிகர்களால் தரிசிக்கப் படுகின்றது. டார்வின்னின் கூர்ப்பு கொள்கையை நம்புவோர்களைவிட மீதிபேர், அல்லது ஆகக் குறைந்தது மதங்களை நம்புவோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட விடயம் மனிதன் இறைவனால் படைக்கப்பட்டான் என்பதே. அப்படியானால் உலகத்தில் ஏதோ ஓர் இடத்தில் முதல் மனிதனின் சஞ்சாரிப்பு இருந்திருக்க வேண்டும். ஆப்ரஹாமின் வழி வந்த மதங்களான யூதமும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் அந்த முதல் மனிதன் “ஆதாம்” என்றே சொல்கின்றன. உலகத்தின் எந்த இடத்திலும் “Adam’s Peak” என்ற இடம் இல்லாமல் அது இலங்கையில் இருப்பதென்பது சிந்தனைக்கு எடுக்க வேண்டிய முதல் விடயமாகும். அதேநேரம் ஐரோப்பியர்தான் இந்த மலைக்கு அப்படி ஒரு பெயர் வைத்தனர் என்பது ஒரு பொய்யான வாதமாகும் என்பதோடு அப்படித்தான் அவர்கள் அம்மலைக்கு பெயர் வைத்தனர் என்றாலும் அது ஒரு தற்ச்செயலான விடயமாக இருக்க முடியாது. ஐரோப்பியரின் இலங்கைக்கான் வருகை ஆரம்பிக்க முன்னரே பல வெளி நாட்டார் இந்த “ஆதம் மலை”யை தரிசிக்கவென்று வந்துள்ளனர். அதில் பிரதானமானவர் நாம் ஏற்கனவே கண்ட மொரோக்கோ நாட்டைச்சேர்ந்த இப்னு பதுதா ஆவார்.
இந்த ஆதாம் சுவனத்தில் இருந்து வந்த படியால்(மதவாதிகளின் நம்பிக்கைப்படி) அவரின் வழிதோன்றகள் “சுவனர்” என அழைக்கப்பட்டனராம். இந்த அடிப்படையிலேயே சுவனர் திரிபடைந்து “சோனகர்” என்றறியப்பட்டனராம். ஆனால் இந்த சோனகரில் பலர் காலவோட்டதின் பிரகாரம் தமது கடவுள் நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். அது சிதறியும், திரிபடைந்தும் “நாகர்” என மாற்றம் அடைந்ததாகவும், இதன் அடிப்படையில் பாம்பை வழிபடும் “நாகர்”இனம் தோன்றியதாகவும், பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவில் இருந்து பிரிந்து செல்ல நாகர்கள் இலங்கையின் வடக்கிலும், இந்தியாவில் பெங்களுரை அண்டிய பகுதியிலும், நாகர்லாந்து என்ற பிரதேசத்திலும் அதிகம் காணப்பட, சோனகர் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், தென் இந்தியாவின் கீழைக்ரை, காவிரி பூம்பட்டிணம், வேலூர் பகுதிகளிலும் இன்றும் சோனகர்களாகவே காணப்படுகின்றனர். இந்த வரலாறு இன்னும் ஐயந்திரிபர நிறுவப்படாமல் இருக்க, சோனகர் அறபு கலப்புடைய இனமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இன்னும் சில இடங்களிலும் உருப்பெற்று அந்தந்த இடங்களில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வாழ்ந்து வந்துள்ள வரலாறு சந்தேகங்களுக் கப்பால் நிருபிக்கப்பட்டுள்ள விடயமாகும்.
No comments:
Post a Comment